28.9 C
Colombo
Friday, August 21, 2026

பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயக அடக்குமுறை ஆயுதம்!

இலங்கைத் தீவில் பயங்கரவாதச் தடைச் சட்டத்தினால் பாரிய அவலங்களை அனுபவிப்பவர்கள் தமிழர்கள் தான். இது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த பயங்கரவாதச் தடைச் சட்டம் அறிமுகமாகும் போது தமிழர் தரப்பு எதிர்க்காமல் சிங்கள அரசின் வார்த்தை யாலங்களை நம்பி மௌனமாக இருந்தனர் என்ற வலி தமிழ் மக்களிடம் ஆழ் மனதில் தீயாக உள்ளது என்று வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

மேலும்,

ஜெயவர்த்தன அரசாங்கம் 1979/07/19 48ம் இலக்க சட்டமாக நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டவரைபை அன்று சட்டமா அதிபராக இருந்த சிவா பசுபதி தயாரிக்க கல்குடாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் நீதி அமைச்சராக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவர அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி 18 எம்பிமாரும் எதிர்க்காது வெளியேற நிறைவேற்றப்பட்டது.

அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்த்தாலும் பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேறி இருக்கும் காரணம் நாடாளுமன்றத்தில் 6/5 பெரும்பாண்மையை ஜெ.ஆர் அரசாங்கம் வைத்திருந்தமை ஆகும்.

பயங்கரவாதச் சட்டம் நிறைவேறி இன்று 42 வருடங்கள் கடந்து செல்கின்றது. இதனால் பெரும் அவலத்தை அனுபவித்தவர்கள் இலங்கைத் தீவின் தேசிய இனமான தமிழர்கள் தான். தமிழரின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்திரிக்க சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு பெரும் உதவியாக இருந்தது, இருப்பது பயங்கரவாத தடைச் சட்டம் தான் என்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க முடியாது.

தமிழரின் ஆயுத வழி விடுதலைப் போராட்ட இயக்கங்களை பங்கரவாத முத்திரையுடன் சிதைத்து அழித்த இனவாத சிங்கள அரசாங்கம் அகிம்சை வழியில் குரல் கொடுக்கும் தேசியவாதிளை சிறைப் பிடிக்க அச்சுறுத்த இந்த சட்டத்தை இன்றுவரை கையாளுகின்றனர்.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஐனநாயக ரீதியாக வெல்லப் படுவதற்கு தடையாக உள்ள இராணுவ மறை கரமாக விளங்குவதே பயங்கரவாத தடைச் சட்டம் தான். இதனை இல்லாது ஒழிப்பதே இலங்கைத் தீவின் ஜனநாயக மறுமலர்ச்சிக்கு வழி சமைக்கும்.

தமிழர்கள் தரப்பில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒன்றினைந்து அரசியல் ரீதியாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கட்சி அரசியல் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து வியூகங்களை வகுக்க வேண்டும் இதன் மூலமே எஞ்சிய தமிழர்களது இருப்பையும் பாதுகாக்க முடியும்.

உள்நாட்டு , சர்வதே அரசியல் சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு சாதகமாக இருக்க மாட்டாது வருகின்ற இடைவெளிகளை தமிழர் தரப்புத் தான் கையாள வேண்டும் சர்வதேசம் தங்களின் பூகோள நலன்களை குறிவைத்த வண்ணமே இருப்பார்கள் அதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டதும் இலங்கைக்கான அழுத்தங்களை நீக்கி விடுவார்கள். ஆனால் தமிழர் பிரதிநிதிகளின் ஒற்றுமை இந்த நகர்வில் இல்லை என்ற கசப்பான உண்மையை மறைக்க முடியாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் விழைவுகளாக காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், அரசியல் படுகொலைகள், போன்ற வார்த்தைகளால் வடிக்க முடியாத அவலங்களை தமிழர்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். ஈழத் தமிழர்கள் வாழ்வில் புதிய மாற்றம் ஏற்பட ஐனநயக முறையில் மறுக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையை வென்றேடுக்க பயங்கவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதே அவசியம். – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles