எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டினர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரங்சினி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம் சாட்டினார்.
இந்த அரசாங்கம் தற்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை உருவாக்கி இனப்படுகொலை செய்யப்பட்டு எங்கள் மக்களை கடத்தவும், காணாமல் போக செய்வதற்குமாக குறித்த சட்டத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் முயல்கி்றது.
இந்த புதிய சட்டத்தால் எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டம் எங்களுக்கு நீதி கோருகின்ற பேரணிகள், ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் சுயாதீனமாக இயங்குகின்ற ஊடகங்கள் கூட எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வர முடியாத அளவிற்கு குறித்த சட்டம் அமையப்போவதாக நாங்கள் அறிகின்றோம்.
வடக்கு கிழக்கிலே வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களிற்கும் ஆபத்தான சட்டமாகதான் நாங்கள் பார்க்கின்றோம். இந்த சட்டத்தை வர்த்தமானி ஊடாக அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயன்றால் அதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.
பாதிக்கப்பட்ட தாய்மாராகிய எமக்கு இதுவரை நீதி கிடைக்காதபோதும், நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதி வேண்டி நிற்கின்றோம். இலங்கை அரசினால் ஒருபோதும் எங்களிற்கான நீதி கிடைக்கப்போவதில்லை. ஒட்டுமொத்தமாக வட கிழக்கு தழிழர்களிற்கான சுய உரிமையும் கிடைக்கப்போவதில்லை.
தமிழ் அரசியல்வாதிகளும், ஏனைய சகோதர இனத்து அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தை எதிர்த்து இல்லாது ஒழிக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம். அரசாங்கம் எக்காரணம் கொண்டும் குறித்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம்.

