செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஐந்து குழந்தைகளின் மனித என்பு கூட்டு தொகுதிகள் அடங்கலாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .
516வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில் மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டது.
மேலும் பரீட்சார்த்தமாக தோண்டப்பட்ட இரண்டு குழிகளில் இருந்தும் தலா ஒரு மனித என்பு கூட்டு தொகுதியும் அடையாளம் காணப்பட்டது – என்றார்.

