28.9 C
Colombo
Friday, August 21, 2026

இலங்கை யாத்திரிகர்கள் இந்தியா பயணிப்பதற்கான விசா நடைமுறைகள் தொடர்பாக தெளிவுபடுத்தல்

இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்க வேண்டும் என்பதனை நாம் எமது நிலையான கொள்கையாக கொண்டிருக்கின்றோம். அத்துடன் உலகம் முழுவதும் காணப்படும், இலங்கை உட்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் தாம் இந்தியாவுக்கு பயணிப்பதற்கு இ-விசா வசதியினை பயன்படுத்திக்கொள்ள முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழலில் உயர் ஸ்தானிகராலயத்தில் விசாவுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் தமது விண்ணப்பங்களை இணையம் மூலமாக நிரப்பி அவற்றினை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள இந்திய கொன்சியூலர் சேவை விண்ணப்ப மையங்களில் (ICAC)  சமர்ப்பிக்க முடியும்.

இந்நிலையில் இந்தியாவுக்கு புனித பௌத்த யாத்திரை தலங்கள்  உட்பட யாத்திரைகளுக்காக பயணிக்கும் இலங்கையர்களுக்கான விசாக்கள் இலகுவாகவும் துரிதமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழுக்களாக யாத்திரைகளை மேற்கொள்பவர்களுக்கான விண்ணப்பங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தும் நிலையில் அவ்வாறான விண்ணப்பதாரர்களுக்கான விசாக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சேவையினை வழங்கும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனரில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஏற்பட்ட மாற்றத்தினை அடுத்து இந்த செயற்பாடு தொடர முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் 2026 ஜூலை 7ஆம் திகதி முதல் புதிய சேவை வழங்குநர் தமது பணிகளை ஆரம்பித்திருக்கும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கான விசாவினை இலவசமாக வழங்கும் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் காணப்பட்ட நடைமுறையினை போலவே இவ்வாறான விண்ணப்பங்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். இவ்வாறான யாத்திரிகர்களுக்கான விசாக்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் குழுக்களாக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுவதுடன்  அவர்கள் குழுக்களாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ  ICAC விசா விண்ணப்ப நிலையத்திற்கு தமது உயிரியல் அடையாளங்களை சமர்ப்பிப்பதற்காக வருகை தரவேண்டும். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் கீழ் இது அத்தியாவசியமான ஒரு தேவையாகும். இருந்த போதிலும் 12 வயது முதல் 70 வயது வரையான விண்ணப்பதாரிகளே இவ்வாறான உயிரியல் அடையாளங்களை வழங்க வேண்டிய தேவை உடையவர்கள் ஆவர்.

இந்நிலையில்  ICAC நிலையங்களுக்கு தமது உயிரியல் அடையாளங்களை வழங்குவதற்காக வருகைதரும் ஏனைய சிரேஷ்ட பிரஜைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களது காத்திருப்பு நேரத்தை சாத்தியமான அளவில் குறைப்பதற்காக விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் அவர்கள் பிரவேசிக்கும் நிலையில் இந்திய குடிவரவு நடைமுறைகளை  அவர்கள் இலகுவாகவும் சுமூகமாகவும் முகம் கொடுப்பதனை கவனத்தில் கொண்டு இவ்வாறான உயிரியல் அடையாளங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

மேலே கூறப்பட்ட வகையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவிதமான விசா கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இலங்கை யாத்திரிகர்களுக்கான விசா கட்டண மாற்றம் தொடர்பாக எந்தவிதமான கேள்வியும் இல்லை. இருந்த போதிலும்  ICAC சேவை கட்டணமாக விண்ணப்பதாரிகள் இலங்கை ரூபா 1855/- ஐ விசா சேவை கட்டணமாக செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles