போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் அது பின்வாங்கப்படமாட்டாது என சனாதிபதி யாழில் உறுதிபடத் தெரிவித்தார்.
நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் முகமாக, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் சனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், சனாதிபதி அவர்கள் தெரிவிக்கையில் பல தடவை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து மக்களை சந்தித்ததை விட இன்றைய தினம் மக்களை சந்தித்தது விசேடமான சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும், நாட்டின் நச்சுப் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்காக இன்றைய தினம் ஒன்று கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறப்பான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு சட்டம் சமமாக இருக்க வேண்டும் எனவும், சக்தி வாய்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதியான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அதில் பல சவால்கள் உள்ளதாகவும், நச்சுப் போதைவஸ்து கிராமம், நகரம் என்று எந்த இடமும் விடாமல் பரவி உள்ளதாகவும், அதனை தோற்கடிக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் பிள்ளைகளை பல எதிர்பார்ப்புக்களுடன் வளர்த்துக் கொண்டு வருகின்றனர் ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் நச்சுப் போதையால் மங்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இவ் நச்சுப் போதைப் பொருள் அச்சுறுத்தலால் பாகுபாடு இன்றி அனைவரும் இரையாகி உள்ளதாகவும், குறிப்பாக சக்தி வாய்ந்த சக்தி இல்லாத நபர்களும் இதற்கு இலக்காகியுள்ளனர் எனவும் அதிமேதகு சனாதிபதி தெரிவித்ததுடன், நச்சுப் போதைப் பொருளானது வளர்ச்சியடைந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியதுடன், அதில் தொடர்புடையவர்கள், பாதாளக் குழுவினருக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் போதைவஸ்து இல்லாத நாட்டை உருவாக்குவோம் என உறுதிமொழி வழங்கினார்.
மேலும், போதைவஸ்திலிருந்து நீங்குவதற்கு இரண்டு பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஒன்று தொடர்பை நீக்குதல் மற்றொன்று அத்துறையில் இருந்து நீங்குதல் எனவும் தெரிவித்து,பொதுமக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் எனவும், போதைவஸ்து அச்சுறுத்தலால் பிள்ளைகளின் வாழ்க்கை ஸ்தம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களும் கணிசமான அளவு இரையாகி உள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் வெட்கமான சம்பவங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மக்கள் யுத்தத்தால் சிக்கி தவித்து தற்போது குறுகிய காலத்தில் போதைவஸ்து தாக்கத்திற்கு இரையாகி உள்ளதாகவும், பல்வேறு இடங்களில் நச்சுப் போதைப் பொருள் அச்சுறுத்தல் பரவி உள்ளதாகவும், பெற்றோர் தம்மிடம் அவர்களை மீட்டுத் தருமாறுகோரி உள்ளதாகவும், நச்சுப் போதைப் பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கு மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை எனவும் அதிமேதகு சனாதிபதி குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்கம் நச்சுப் போதைப் பொருளை தோற்கடிக்க முன்வந்துள்ளதாகவும், ஊர் மக்களுக்கு இந்த நச்சுப் போதைப் பொருட்களை விற்பவர்களையும் அது தொடர்பான விடயங்கள் பற்றியும் தெரிந்திருக்கும் என்றாலும் அதனை சொல்வதற்கு பயப்படுவதாகவும், இனிமேல் அதனை பயப்படாமல் போதை வஸ்து வியாபாரிகளுக்கு எதிராக முன்வர வேண்டும் எனவும் அதற்கு கிராம அலுவலர்கள், பொலீஸ் அதிகாரிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் அதற்குரிய காவலாக இருப்பதாகவும், இதனை தோற்கடிக்க தயாராகுமாறும் மக்களை அதிமேதகு சனாதிபதி கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்போது பாடசாலை மாணவ மாணவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச துறை உத்தியோகத்தர்கள் அனைத்து இடங்களிலும் மூலை முடுக்கெங்கும் போதைவஸ்து பரவி உள்ளதாகவும், பொறுப்பு கூற வேண்டியவர்கள் பொறுப்பு கூறாதது ஏன் எனவும் அதனை மீட்டெடுக்க பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும் தெரிவித்ததுடன், போதை வஸ்து பாவனையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சீராக்க புனர்வாழ்வு மையங்களுக்கு அழைத்துச் சென்று அதில் இணைத்து அவர்களை மீட்டெடுக்குமாறும், அவர்களுக்குரிய எதிர்கால வாழ்க்கையை சீரமைக்க தொழிற்பயிற்சிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு இனவாதத்தையும் தலை தூக்க விடமாட்டோம் என்ற உறுதியையும் வழங்குவதாகவும், தன்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை இழக்க மாட்டேன் எனவும் தெரிவித்துடன், 2025 ஆம் ஆண்டு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பாக சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வருமானம், சுங்கவரி திணைக்களம் ஆகியவற்றின் மூலம் அதிகூடிய வருமானம் பெற்ற வருடமாகவும், பொருளாதார ரீதியாக முன்னோக்கிச் சென்ற நாடாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இவ் வருடம் 50000 மேற்பட்ட வீடுகளை நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கவுள்ளதாகவும், அரச துறையில் 75,000 உத்தியோகத்தர்களை இணைக்க உள்ளதாகவும், பொலீஸ் உத்தியோகத்தர்களாக 10,000 பேரை இணைக்க உள்ளதாகவும் அதிமேதகு சனாதிபதி மேலும் தெரிவித்ததுடன், பொலீஸ் துறையில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களின் குறைபாட்டை நீக்குவதற்காக தமிழ் மொழி பேசும் உத்தியோகத்தர்களை இணைக்க உள்ளதாகவும் முப்படைகளிலும் அனைத்து மொழிகளிலும் செயற்பட ஆட்களை இணைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை நாட்டில் இனிமேல் நிரந்தர வீடு, வருமானம், கல்வி, சுகாதாரம், உளரீதியான நிம்மதி இல்லாமல் மக்கள் வாழக்கூடாது எனவும் அவர்களுடைய எதிர்பார்ப்பான கல்வி, சுகாதாரம், வருமானம் உள ரீதியான நிம்மதி போன்றவற்றையுடைய பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், போதைப்பொருளின் ஆபத்து எந்த இடம், எந்த பிரஜை, எந்த நகரம், எந்த கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர் அல்லது தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவுகிறது எனவும் நாட்டின் இளைஞர்களை இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயற்படுத்தப்படும் என்றும், அது பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும், அதற்காக, “அனைவரும் ஒன்று சேர்ந்து நாடு முழுவதும் ஒரு பாரிய பாதுகாப்பு வளையமாக செயற்பட வேண்டும்” என அதிமேதகு சனாதிபதி தெரிவித்து,
போதையில்லாத நாட்டை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு சனாதிபதி கேட்டு கொண்டார்.

