29.5 C
Colombo
Friday, August 21, 2026

மக்கள் பீதியடைய வேண்டாம் – யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா

யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கிற பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை என்றார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ரி.என்.சூரியராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது

வளிமண்டலவியல் திணைக்களத்தின் மதியநேர அறிக்கையின்படி தாழமுக்கமானது பொத்துவிலில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் அளவில் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டு காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டு இருக்கிறது. அது மேலும் ஆழ்ந்த தாழமுக்கமாக வருவதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன் குறிப்பாக கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் கடல் காற்றின் வேகம் உயர்வாக காணப்படும். குறிப்பாக 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வரை காற்று வீசும். கடல் அலை உயரமானது 3.5 மீட்டர் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

யாழ் மாவட்டத்திற்குரிய தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் கூடுதலான மழை வீழ்ச்சி அதாவது 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது அரச அதிபரினால் சகல பிரதேச செயலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக சகல கிராமமட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் மக்களுக்கு வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் மக்களை பாதுகாத்துக் கொண்டு செல்ல, சமைத்த உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒன்பதாம் பத்தாம் திகதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கிற பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles