செம்மணி மனித புதைகுழியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் இருக்காலாமென ஸ்கான் பரிசோதனையில் தெரியவந்த நிலையில் மேலும் எட்டு வாரங்களுக்கு அகழ்வு பணிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பான விசாரணை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமா தேவா உள்ளிட்ட குழுவினரால் ஸ்கான் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கைகளின் படி குறைந்தது மேலும் எட்டு வாரங்களுக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இந்த அகழ்வை செய்ய வேண்டும் என பேராசிரியர் ராஜ் சோமதேவவால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் அது சம்பந்தமான நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்புகளுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா கட்டளையிட்டார்.
யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழிகளில் முதல் கட்டமாக 9 நாளும் இரண்டாம் கட்டத்தில் 45 நாள் அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு இதுவரை 32 நாளும் என மொத்தமாக 41 நாள் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 140 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

