வேலணை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிவலிங்கம் அசோக்குமார் ஏகமனதாக தெரிவானார்.
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வேலணை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
22 உறுப்பினர்களை கொண்ட வேலணை பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, சுயேட்சை குழு – 1, சுயேட்சை குழு – 2, சுயேட்சை குழு – 3 ஆகிய ஐந்து கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் என்பன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சிவலிங்கம் அசோக்குமார் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார்.
இதன்போது சுயேட்சை குழு உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
சபையில் தவிசாளருக்கு வேறு எந்த தெரிவுகளும் முன்மொழியப்படாத நிலையில் சிவலிங்கம் அசோக்குமார் தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த கணபதிப்பிள்ளை வசந்தகுமார் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

