நாம் சிங்கள மத்தியில் நீண்டகாலமாக கடும் முயற்சி செய்து தேசிய மக்கள் சக்தியை எடுத்து சென்றோம். தெற்கில் எமது செயற்பாடுகளை செய்த அளவுக்கு நாம் வடக்கில் செய்யவில்லை. இதனை நாம் நேர்மையாக ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். வடக்கு பிரச்சினைகள் தாமதமாகவே எங்களுக்கு தெரியவரும். அந்த நிலையிலும் நீங்கள் எங்களை நம்பினீர்கள். நீங்கள் பிடித்த கையை ஒருபோதும் விடமாட்டோம் என உறுதியளிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற செய்தமைக்கு முதலில் நன்றி. வரலாற்றில் வடக்கு மக்கள் தமிழ் கட்சிகளுக்கும் கிழக்கு மக்கள் முஸ்லிம் கட்சிகளுக்கும் தெற்கு மக்கள் சிங்கள கட்சிகளுக்குமே வாக்களித்து வந்தனர். கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு தெற்கு என முழு நாட்டு மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தார்கள்.
நாங்கள் பிரிந்து செல்ல வேண்டுமா? நாங்கள் அடிபட வேண்டுமா? சந்தேகத்துடன் இருக்க வேண்டுமா?சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும். நாங்கள் சந்தேகத்துடன் பகைமையுடன் கடந்த காலத்தில் போர் புரிந்தோம். இதனால் வடபகுதி அழிவடைந்தது. உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தனர். வடக்கை போல தெற்கிலும் இதுவே நடந்தது. இதற்கு முடிவு காணவேண்டும். எங்கள் பரம்பரை சண்டை பிடித்தது. அது தொடர வேண்டுமா? எங்கள் பிள்ளைகள் சண்டை பிடிக்காதிருக்கும் நாட்டை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு உண்டு. இலகுவாக அதனை முடிவுக்கு கொண்டு வரலாம். அதை வைத்து வடக்கில் செய்யப்படும் அரசியலும் தெற்கில் அதை வைத்து செய்யப்படும் அரசியலும் நிறுத்தப்பட வேண்டும். ஊர் மக்கள் விகாரை பிக்கு சேர்ந்து பிரச்சினையை தீர்க்கலாம். மக்களின் உரிமையை பறித்தெடுக்கும் அரசாங்கமாக நாம் ஒருபோதும் செயற்பட மாட்டோம்.
தொல்லியல் விடயங்களை சிங்கள தமிழ் என பிரித்து பார்க்க வேண்டுமா? அதனை நாட்டின் மரபாகவே பார்க்க வேண்டும். மீண்டும் நாட்டில் முரண்பாட்டை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். இனவாதத்தை தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
யாழ்ப்பாணத்தில் பரம்பரையாக அரசியல் செய்த தலைவர்கள் கட்சிகள் இருந்தது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இருக்கும் போது நீங்கள் எங்களையும் இளங்குமரனையும் றஜீவனையும் பவனாந்தராஜாவையும் தெரிவு செய்தீர்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்து புதிய அணியை தெரிவு செய்தீர்கள். எங்கள் மீது வைத்த நம்பிக்கையை முறியடிக்க விடமாட்டேன். எந்த விதமான முத்திரையை எம்மீது குத்தினாலும் தேசிய ஒற்றுமைக்காக சகல வேலைகளையும் செய்வோம்.
யுத்தம் காரணமாக மக்கள் காணிகள் கடந்த காலத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் சென்றது. பாதுகாப்பு காரணத்தை காட்டி அரசாங்கம் தொடர்ந்து காணியை வைத்திருக்க முடியாது. விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம்.
பிடிக்கப்பட்ட காணிகள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். மீண்டும் போர் வேண்டும் என்று சிலர் வேலை செய்கின்றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அவ்வாறல்ல. பாதைகள் சில மூடப்பட்டிருந்தது. அந்த பாதைகளை திறந்துள்ளோம். கொழும்பிலும் அவ்வாறு சில பாதைகள் இருந்தது. அதனையும் திறந்துள்ளோம். அதேபோல யாழ்ப்பாணத்திலும் பாதைகளை மூட வேண்டிய தேவை இல்லை.மீண்டும் இயல்பான யாழ்ப்பாணத்தை கொண்டு வருவோம்.
காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை இங்கு உள்ளது. அரசாங்கம், பொலிஸார், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தேடிப் பார்க்க வேண்டும். ஒரு பிள்ளை இறந்தால் சில காலத்தில் அந்த துயரம் போய்விடும். ஆனால் ஒரு பிள்ளை காணாமல்போன அது பெரும் வேதனை. தாய்மாரின் வேதனை எனக்கு தெரியும். எனது குடும்பத்திலும் அப்படியொரு சம்பவம் நடந்தது.
வரலாற்றில் இருந்து வரும் வேதனையில் இருந்து மீள வேண்டும். இங்குள்ள பழைய கட்சிகளை பழைய தலைவர்களை தெரிவு செய்யாமல் ஏன் எங்களை மக்கள் தெரிவு செய்தார்கள். எண்ணெய், மருந்து, எரிவாயு கொண்டுவர முடியாது நாட்டை சீரழித்தார்கள். படிப்படியாக நாட்டை கட்டியெழுப்புகிறோம். படிப்படியாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்.
நாங்கள் எல்லா நாடுகளிலும் இருந்து உதவிகளை பெறுவோம். புதிதாக 4 இலட்சம் மக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவோம். 30,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸ் சேவையில் தமிழ் மக்கள் இணைத்து கொள்ளப்படுவர். கடற்படை மற்றும் விமானப்படையில் தமிழர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு கடலை பாதுகாக்க தமிழர்கள் கடற்படையில் இணைய வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பங்கேற்றேன்.அங்கு சமர்ப்பிக்கப்பட்ட எல்லா திட்ட முன்மொழிவுக்கும் வரவு செலவு திட்டத்தில் பணம் ஒதுக்கினோம்.
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகை எனக்கு தேவை இல்லை. மக்களுக்கு வேலை செய்யவும் தொழில் வாய்ப்பை வழங்கவும் அதனை பயன்படுத்துவோம்.
வீதி புனரமைப்புக்கு 5 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொது சன நூலகம் எரிக்கப்பட்டது. அது இனவாதத்தின் உச்சக்கட்டம். யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபை கட்டிடம் பெரிதாக உள்ளது. முழுமையாக பூர்த்தி செய்த பின்னர் என்ன செய்வது என யோசிக்கிறோம். வீடுகள் சிறியது. ஆனால் யாழ் மாநகர சபை கட்டிடம் பெரியது. அதனை மக்களுக்குரியதாக மாற்றுவோம்.
வரலாற்று பண்பாட்டை பிரதிபலிக்கும் யாழ்ப்பாணத்தை உருவாக்க அடுத்த வருடத்தில் பணம் ஒதுக்குவோம். நீர் பிரச்சினை, கழிவகற்றல் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு பிரதேசத்தில் பாரிய கடல் வளம் உண்டு. சட்டவிரோத கடற்றொழில் நடைபெறுகிறது. இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசினேன். இந்த மீன்வளம் வடபகுதிக்கு சொந்தமானது. இதனை காப்பாற்ற சகல நடவடிக்கைகளையும் எடுக்க கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளேன்.
1983 இல் இருந்து தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது அவர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து முதலிட வேண்டும். இது இனவாதம் இல்லாத நாடு. இந்த நாட்டை சிறப்பாக முன்கொண்டு செல்ல உங்கள் உதவி தேவை.
மக்களுடைய பணத்தை களவு செய்யாத அரசாங்கத்தை உருவாக்குவோம். மக்களின் பணத்தை களவெடுத்து விரயம் செய்ய மாட்டோம். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் செல்வந்தர்கள் ஆகியிருந்தனர். மணல் வியாபாரம் செய்தார்கள். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. செல்வந்தர் ஏழை என சட்டம் இருக்காது. அவ்வாறு ஒரு காலம் இருந்தது. இனி அவ்வாறு இல்லை. இலங்கையில் முதன்முதலாக பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு பயந்து பதுங்கினார். ஒரு அமைச்சர், முன்னாள் முதலமைச்சர்கள் இருவர் சிறையில் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கு மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் செய்து தப்பிக்கும் காலம் முடிந்து விட்டது.
ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்றம் எங்களிடம் உள்ளது. மேல்மட்ட தீர்மானத்தை கீழ் மட்டத்தில் நடைமுறைப்படுத்த பிரதேச சபைகள் எமக்கு தேவை.யாழ்ப்பாணத்தில் பல உள்ளூராட்சி சபைகளுக்கு வருமானம் போதாது. மத்திய அரசில் இருந்து பணம் அனுப்ப வேண்டும்.
மாநகர சபை, பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை ஒதுக்குவோம்.வேறு யாரும் ஆட்சியில் இருந்தால் பத்து தடவைகள் யோசிப்போம்.
மத்திய அரசாங்கம் களவெடுக்காது இருக்கும்போது பிரதேச சபையில் உள்ளவர்கள் களவெடுத்தால் நிலைமை என்னவாகும். தேசிய மக்கள் சக்திக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளையும் நாம் வெல்வோம். எங்களுக்கு ஆட்சி தராவிட்டால் நீங்கள் யாருக்கு கொடுப்பீர்கள். ஒரு கட்சியை சொல்லுங்கள். அவர்கள் காலம் முடிவடைந்து விட்டது.
உங்களுக்கு அநியாயம் நடந்தது. உங்களுக்கு தனித்துவமான பிரச்சினைகள் உள்ளது எமக்கு தெரியும். எல்லாவற்றையும் படிப்படியாக தீர்ப்போம்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் எல்லோரும் இணைந்து தேசிய விழாவை கொழும்பில் கொண்டாடுவோம். அதற்கு அடுத்த முறை பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் அந்த தேசிய விழாவை கொண்டாடுவோம். எங்கள் கலாசாரத்தை இதில் பகிர்வோம்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க நடவடிக்கை எடுப்போம். நாங்கள் எப்படியாவது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை ஐந்து வருடத்துக்குள் அமைத்து சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் விளையாட வேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்வோம். அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவோம்.
முதலீட்டு சபையுடன் கலந்துரையாடி வடக்கில் காங்கேசன்துறை,பரந்தன், மாங்குளம் என மூன்று கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவோம்.
நாம் பிரிந்து போகாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாக விகாரைக்கு தமிழ் மக்கள் வருகிறார்கள். எங்களை பிரிப்பவர்கள் யார். அது அரசியல்வாதிகளுக்கே தேவை. மக்களுக்கு அந்த தேவையில்லை.
எங்கள் ஊரில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி, மருத்துவமனை அதிகாரியாக தமிழர்களே இருந்தனர். எமக்குள் எந்த பிரச்சினைகளும் வரவில்லை.
கறுப்பு அத்தியாயம் முடிந்தது. இனி புதிய அத்தியாயம். புதிய நாடு புதிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. இனி மீண்டும் பிளவுபட முடியாது. புதிய அத்தியாயத்தை தொடங்க எல்லோரும் ஒன்றாகுவோம் – என்றார்.
அரசியல் கைதிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது உரையில் எவற்றையும் குறிப்பிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


