எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு ஆதரவளிக்க வேண்டும் வடபகுதியைச் சேர்ந்த பன்முக ஆளுமைகள் குழுவொன்று அழைப்பு விடுத்தது.
சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என வடபகுதியைச் சேர்ந்த 16 பன்முக ஆளுமைகளின் குழுவினர் யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் தெரிவிக்கையில், தெற்காசியாவில் பொருளாதார ரீதியில் வளமான, ஒரு முன்னணி நாடாக, சுதந்திரத்தினை பெற்ற நாம் இன்று திவாலான ஒரு நாடாக மாறி நிற்கின்றோம். சுதந்திரம் பெற்றபோது எமது நாட்டில் இனங்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக, ஐந்து உயரடுக்கு குடும்பங்களை சேர்ந்தவர்களே, இரண்டு கட்சிகளின் ஊடாக, மாறி மாறி நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். சுதந்திரத்தினை நாம் இலங்கையர்களாகவே பெற்றோம். ஆனாலும் மாறி மாறி ஆட்சியை பிடிப்பதற்காக இனவாதத்தினை தூண்டிய இந்த குடும்பங்களது எழுபத்து ஐந்து வருட இனவாத ஆட்சியின் பின்னர், நாம் இன்று இலங்கையர் என்ற அடையாளத்தை தொலைத்து, சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும் பிரிந்து நிற்கின்றோம்.
தற்போது மேற்படி உயரடுக்கு குடும்பங்களினை சாராத இனவாதமற்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அனைத்து இன மக்களையும் சமமாக அணுகி இலங்கையர் என்று அடையாளத்தை மீள ஏற்படுத்த முனைகின்றது.
தமிழ் இயக்கங்கள் எண்பதுகளில், எமது போராட்டம் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரானதேயன்றி, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என தெளிவாகக் கூறியிருந்தன. இன்று சிங்கள பேரினவாத அரசாங்கம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், எமது பிராந்திய அரசியல் கட்சிகள், தமது பிழைப்புவாத அரசியலினை முன்னெடுப்பதற்காக சிங்கள மக்கள் அனைவரையும் பேரினவாதிகளாக சித்தரிக்க முனைகின்றனர். அவ்வாறு சித்தரிப்பதன் மூலம் தேசிய மக்கள் கட்சியினையும் பேரினவாத கட்சியாக காட்டி தமது சுயநல பிழைப்புவாத அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கலாம் என நினைக்கின்றனர்.
முன்பு இலங்கை கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதைத் தொடர்ந்து நாட்டு மக்கள் இன மத மொழி பேதம் கடந்து குதூகலித்தது, இலங்கையராக கிரிக்கெட் அணியினை ஆதரித்தனர். அதே போன்று, கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரவினது வெற்றியினை தொடர்ந்து நாட்டு மக்கள் இன மத மொழி பேதம் கடந்து குதூகலித்துதுடன், இன்று இலங்கையராக தேசிய மக்கள் சக்தியை ஆதரித்து நிற்கின்றனர். இனவாதத்தினால் பிரிந்து போயிருந்த ஒரு தேசத்திற்கு இலங்கையர் என்ற உணர்வினை முதலில் நடைமுறையில் தோற்றுவித்தது எமது கிரிக்கெட் அணி. அதே போன்று பிரிந்து போயிருக்கும் தேசத்தில் இலங்கையர் என்ற உணர்வினை தோற்றுவிக்கும் அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி.
உள்நாட்டு போரின் பின்னரான கடந்த பதினைந்து வருட காலத்தில் வடபகுதி மக்கள் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இளைஞர்களும் படித்தவர்களும் எமது பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டு கனவுகளுடன், எமது பிரதேசத்தினை தற்காலிக தங்குமிடமாக கருதி வாழும் இளைஞர்களிடம் சமூக அக்கறையம் கூட்டு பொறுப்புணர்வும் குறைந்து செல்கின்றது. இளைஞர்களிடையே போதைவஸ்து பாவனையும் கும்பல் வன்முறையும் அதிகரித்து வருகின்றது.
எமது பிரதேசத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகள் எதிர்ப்பு அரசியலினை தொடர்ந்து முன்னெடுத்துவந்த காரணத்தினாலும், முன்னைய இனவாத அரசாங்கங்களின் பாராமுகத்தினாலும், யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்த பின்னரும் எமது பிரதேசத்தில்;
முறையான அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மூடப்பட்ட பல தொழிற்சாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை. அரச வேலைகள் பெறுவது எமது பிரதேச இளைஞர்களுக்கு இலகுவானதாக இல்லை. வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் அதிகரித்த பிரதேசமாக எமது பிரதேசம் காணப்படுகின்றது.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலால் வட மாகாண மீனவர்கள் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். மக்களுக்கு சேவை வழங்குவதில் ஆர்வமற்ற அரச அலுவலர்களால், அரச அலுவலகங்களில் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சிங்களத்தில் வரும் உத்தியோகபூர்வ அரச கடிதங்களை வாசித்து புரிந்து கொள்வதில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சட்டம் ஒழுங்கையோ, வீதி ஒழுங்குகளையோ, முறையாக நிலை நாட்டாது, வீதிகளில் இலஞ்ச பணத்தை பெறுவதிலேயே காவல்துறை குறியாக இருக்கின்றது. மக்கள் நலன் சாராது, அலட்சிய போக்குடன் பல கிராமப்புற ஆதார வைத்தியசாலைகள் செயல்படுகின்றன. பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
நுண் நிதி கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்று அதனை கட்ட முடியாததால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. நகரத்திலுள்ள ஒரு சில அரச பாடசாலைகளே தரமானவையாக உள்ளன. இலவச கல்வியும் இலவச மருத்துவமும் கிராமப்புறங்களில் தரமானதாக இல்லாததால், மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் . கிராமங்களில் தமது தோட்டங்களையும் கால்நடைகளையும் கைவிட்டு நகரங்களில் அதிக வாடகைக்கு வீடுகளை பெற வேண்டிய அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான பல பிரச்சினைகள் காரணமாக எமது பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழ முடியாது என நினைக்கும் படித்தவர்களும் இளைஞர்களும் எமது பிரதேசத்தினை விட்டு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். முன்பு யாழ்ப்பாணம் பன்னிரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அது பின்னர் ஒன்பதாகி ஏழாகி தற்போது ஆறாக குறைந்துள்ளது.
எமது பிராந்திய அரசியல்வாதிகள் இப்பிரச்சனைகள் குறித்த எவ்வித பிரக்ஞையும் இன்றி இருக்கிறார்கள். அவர்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையும் மாத்திரமே தமிழர்களின் பிரச்சனை என கருதுகிறார்கள். ஆனாலும், கடந்த பதினைந்து வருடங்களாக இப்பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும், தீர்க்க விரும்பாமலும், அதனை வைத்தே தமது சுயநல பிழைப்புவாத அரசியலினை நகர்த்தி, தமது குடும்பங்களிற்கு வளமான வாழ்வினை அமைத்து கொண்டுள்ளார்கள். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் போர்க்குற்றங்களுக்கான விசாரணையும் தமிழ் மக்களின் தலையாய பிரச்சினைகள் தான், ஆனாலும் அவை மாத்திரமே எமது பிரச்சினைகள் அல்ல.
பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும் என இன்று கூறும் பிராந்திய அரசியல்வாதிகளது கடந்த கால அரசியல் அணுகுமுறையினால்தான் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஆறாக குறைந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியானது இலங்கையில் தமிழ் பேசும் அனைத்து தரப்பினரது அபிலாசைகளையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சி நிரலை கொண்டிருப்பதுடன், அம்மக்களின் எதிர்கால சந்ததியினர் தொடர்பான பிரக்ஞை பூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது என நாம் உணர்கின்றோம்.
தமிழ் மக்கள் உடனான அரச தொடர்பாடல் அனைத்தையும் தமிழிலே செய்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் எடுத்து வருகின்றது.
இனவிகிதாசாரத்தை மாற்றக்கூடிய திட்டமிட்ட குடியேற்றங்கள் தமது ஆட்சியில் நடைபெற மாட்டாது என தேர்தல் விஞ்ஞாபனத்தி ல் உறுதியாக தெரிவித்துள்ளது.
உறுதியளித்தபடி தமிழ் மக்களது பூர்விக இடங்களையும் அவற்றிற்கான பாதைகளையும் மீளக் கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அனைத்து இன மக்களும் தமது அடையாளங்களுடனும் தமக்கான தனியான கலாச்சாரங்களுடனும் கௌரவமாக வாழ்வதை தேசிய மக்கள் சக்தியின் அரசு உறுதிப்படுத்துகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி மொத்த தேசிய உற்பத்தியில் ஆறுவீதத்தினை கல்விக்கு ஒதுக்க தீர்மானித்துள்ளனர். இதனால் விளையவுள்ள பல நன்மைகளுள் ஒன்றாக, அனைவருக்கும் தமது வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள் தரமான ஒரு பாடசாலை அபிவிருத்தி செய்யப்படும். இதனால் கிராம மக்கள் தரமான நகர்ப்புற பாடசாலைகளுக்காக நகரத்தை நோக்கி இடம்பெயர வேண்டிய தேவை இருக்காது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி மொத்த தேசிய உற்பத்தியில் மூன்று வீதத்தினை சுகாதாரத் துறைக்கு ஒதுக்க தீர்மானித்துள்ளனர். இதனால் இலவச வைத்திய சேவை வினைத்திறன் மிக்கதாகும். இதனால் கிராமப்புற ஆதார வைத்தியசாலைகளிலும் தரமான மருத்துவ சேவையினை மக்கள் பெற்றுக் கொள்ள கூடியதாகவிருக்கும்.
கிராமிய பெண்கள் முகங் கொடுத்துள்ள அநீதியான நுண் நிதி கடன் சுமைகளில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான திட்டங்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வட பகுதியில் தொழிற்சாலைகளை மீள இயங்க வைப்பதிலும், வடப்பகுதிக்கான நிலையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதிலும், இந்த அரசும் வடபகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரும் ஆர்வமாக உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி, வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் பிரச்சனைகளை இராசதந்திர ரீதியில் உறுதியுடன் எதிர்கொள்ள கூடிய அரசாக இந்த அரசு அமையும் என நாம் நம்புகிறோம்.
இந்த அரசின் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாக காவல்துறையினரும் அரச அலுவலங்களும் மக்கள் நலனை மையப்படுத்திய சேவையினை ஆரம்பித்துள்ளதனை அறியக்கூடியதாகவுள்ளது.
ஊழலை ஒழிக்கும் இந்த அரசின் அணுகுமுறைக்கிணங்க, காவல்துறை வடக்கில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனையினையும், வன்முறையினையும் கட்டுப்படுத்தும் என நாம் நம்புகிறோம்.
இந்த அரசின் கொள்கைத் திட்டத்தின் காரணமாக நாமும் எமது சந்ததியினரும் வாழ விரும்பும் பிரதேசமாக எமது பிரதேசம் வளம் பெறும் என நம்புகின்றோம். இதன் மூலம் எமது பிரதேசத்தினை விட்டு இளைஞர்களும் படித்தவர்களும் வெளியேறுவது குறைவடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனவே, கடந்த கால நிகழ்வுகளில் மாத்திரம் தொங்கிக் கொண்டிருக்காது, நிகழ்கால யதார்தத்தினை உணர்ந்து, இந்த மண்ணில் எமது தொடர்ச்சியான எதிர்கால இருப்பிற்காக வாக்களிக்க வேண்டிய நேரமிது.
இதுவரை நாம் வாக்களித்து பாராளுமன்றம் சென்றவர்களால் அவர்களது குடும்பங்களே வளமான எதிர்காலத்தை பெற்றன. இனிவரும் காலத்தில், எமது மண்ணில், எமது குடும்பங்களின் வளமான எதிர்காலத்திற்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்போம் – என்றனர்.

