ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறுவதற்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டார்.
ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ(VIEW) அமைப்பால் விசேட பயிற்சி வேலைத் திட்டம் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிதியின்மை என்ற காரணத்தை குறிப்பிட்டு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

