மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கேக் வெட்டிக் கொண்டாடச் சென்ற
சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் மற்றும்
கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த
ஆண் உட்பட இருவரையும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 53 நாள்களின் பின்பு மட்டக்களப்பு நீதவான் வியாழக்கிழமை(18) வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.
கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதி பட்டிப்பளை கொக்கட்டிச்சோலையை சேர்ந்தவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவில் தற்போது வசித்துவருபவருமான குறித்த பெண் சம்பவதினமான 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் ‘இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் – வே.பிரபாகரன் அண்ணா தலைவர்’ என எழுத்துப் பொறித்து வாங்கி எடுத்துக் கொண்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்ற புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து அவரை கைது செய்தனர்.இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் கடமையாற்றிவரும் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 35 வயதுடைய நபரையும் கேக்கில் பிறந்த
நாள் மற்றும் பிரபாகரனின் பெயரை பொறித்து கொடுத்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 53 நாள்கள் விளக்கமறியல் வைக்கப்பட்ட நிலையில் இருவரின் வழக்கும்
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவர்களை நீதவான் வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.

