முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக 56 கிராமங்களைச் சேர்ந்த 976 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சி. கோகுலராஜா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றன. முத்தையன் கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.இந்த குளங்களின் கீழ் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
வெள்ள நீர் வழிந்து ஓட முடியாத நிலையில் பல்வேறுபட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
56 கிராம சேவகர் பிரிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 976 குடும்பங்களைச் சேர்ந்த 3010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 அங்கத்தவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதிகளவான வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் 15 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் பருவ மழையானது இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் தொடரக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதால் மேலும் ஒரு காற்றழுத்தம் ஒன்று வங்கக் கடலில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதால் மக்கள் இதனை கவனத்தில் கொண்டு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

