நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது.
நாட்டை வங்குரோத்தாக்கிய நபர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்யுமாறும்,இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்றும்,
நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் பேருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இன்று (23) கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் கையெழுத்து திரட்டும் பணியை ஆரம்பித்தது.
இதன் பிரகாரம் நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் சமய தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டு தங்களின் கையொப்பங்களை பதிவிட்டனர்.

