நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கள தரவுகளின் படி தொல்புரம் பகுதியில் 119 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

