மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் ஜனாதிபதி பயணிக்கும் குறித்த வீதியில் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பண்ணையாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் போராட்டக்களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் – போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


