29.5 C
Colombo
Friday, August 21, 2026

அனைத்து தரப்பையும் ஒன்றிணைக்கும் இயலுமை ரணிலிடமே உள்ளது – வஜிர அபேவர்தன எம்.பி.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறுகிய காலத்தில் பெருமளவான சட்டங்களைக் கொண்டுவந்ததாகவும், வலுவான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து அதனை உரிய வகையில் சட்டமாக்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருத்தமானவர்கள் மற்றும் பொருத்தமற்றவர்கள் என அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றும் இயலுமை ரணில் விக்ரமசிங்க என்னும் தலைமையிடம் உள்ளது. அவரின் அனுபவங்களை தேசிய நலனுக்காக பயன்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்ட வஜீர அபேவர்தன, நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டுமெனில் அரச பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அதேபோல் பாராளுமன்றத்தில் காணப்படும் அரசியல் ஒற்றுமையின்மை நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும், அதனால் அரசியல்வாதிகளின் பலவீனமாக விளையாட்டுக்களை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த வஜீர அபேவர்தன,

“சுதந்திரத்தின் போது அனைத்து இலங்கை அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட்டதால் டி.எஸ்.சேனநாயக்க, 98 ஆசனங்களில் 42 ஆசனங்களைப் பெற்று தோற்கடிக்கப்பட்டாலும், வடக்கின் தழிழ் தலைவர்களின் ஒற்றுமையின் காரணமாக, சேர் பொன். அருணாசலம், பொன். இராமநாதன் மற்றும் சம சமாஜ, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கையின் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் இணைந்து, டி.எஸ்.சேனநாயக்கவை இலங்கை பிரதமராக்கினர்.

இந்த ஒற்றுமையின் காரணமாகவே நாடு சுதந்திரம் அடைய முடிந்தது. பின்னர் 1952 இல் பண்டாரநாயக்க பிரிந்து சென்றமை மற்றும் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சிகள் பிளவுபட்டு புதிய அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. அதனால் இன்று 75 அரசியல் கட்சிகள் உருப்பெற்றுள்ளன. இதுவும் நாட்டின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்தது.

அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையிலான போட்டிக்காக அள்ளிவீசிய வாக்குறுதிகளின் பலனாக நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. இறுதியில் பாராளுமன்றத்தின் 225 பேரையும் நாட்டு மக்கள் நிராகரித்த வேளையில் கடந்த மே மாதம் 12ஆம் திகதி பிரதமராகவும், கடந்த ஜூலை 20ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வீழ்ந்துகிடந்த நாட்டை சீரமைத்து, தன்னை ஒரு தேசிய தலைவராக நிரூபித்துக்காட்டி நாட்டையும், தேசத்தையும் பாதுகாக்க முன்வந்துள்ளார்.

அவரது அரசியல் அனுபவத்தைப் பார்க்கும் போது, அவர் முன்னாள் ஜனாதிபதிகளான, ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் பணியாற்றியுள்ளதோடு தற்போது பொதுஜன பெரமுனவுடனும் இணைந்து செயற்படுகிறார்.

பொருத்தமானவர்கள் மற்றும் பொருத்தமற்றவர்கள் என அனைத்து தரப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றும், அவர்களை ஒன்றிணைக்கும் இயலுமை ரணில் விக்ரமசிங்க என்னும் தலைமையிடம் உள்ளது. அவரின் அனுபவங்களை தேசிய நலனுக்காக பயன்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அதேபோல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒரு வருட குறுகிய காலப்பகுதியில் பெருமளவான சட்டத் திருத்தங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார்.

அரசியல் களத்தில் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஒருவரை ஒருவர் திருடர் என்று வசைபாடிக் கொண்டிருக்கும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே ஊழல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், மிக சக்திவாய்ந்த ஊழல் தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அதை சட்டமாக்கி, நாட்டை சரியான பாதைக்கு வழிநடத்தி வருகிறார்.

இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான இரண்டு பிரதான நிறுவனங்களான நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மறுசீரமைப்பு முழு அரச பொறிமுறையிலும் (System Change) செய்யப்பட வேண்டும். மறுசீரமைப்பு செயல்முறை பாராளுமன்றத்தின் ஊடாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது – என்றார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles