இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவம்சவை, இன்று திங்கட்கிழமை (19) நீதிமன்றில் ஆஜராகத் தவறிய காரணத்தினால் அவரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த தினத்தன்று கொழும்பில் உள்ள ஐநா வளாகத்திற்கு எதிரே உள்ள பிரதான வீதியை மறித்து போராட்டம் நடத்தியமை மற்றும் பொது ஒழுங்கு மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் முன்னிலையில் திங்கட்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் முதல் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்த விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
வழக்கின் மற்றுமொரு சந்தேக நபரான வீரகுமார திஸாநாயக்கவும் திங்கட்கிழமை (19) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, மேலும் அவர் மருத்துவ அறிக்கையை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
வழக்கின் ஏனைய சந்தேக நபர்களான மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர, ரொஜர் செனவிரத்ன மற்றும் பியசிறி விஜேநாயக்க ஆகியோர் திங்கட்கிழமை (19) நீதிமன்றில் முன்னிலையாகினர்.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படும் போது சந்தேக நபர்கள் மாறி மாறி ஆஜராகாமல் இருப்பது வழக்கை ஒருபோதும் விசாரிக்க முடியாத சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என கொழும்பு பிரதான நீதவான் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் தொடர்ந்தும் நீதிமன்றத்தைத் தவிர்க்கும் பட்சத்தில், அவர்களையும் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.

