இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பித்த பேரணி முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்தது.
இன்று(07) திருகோணமலையில் ஆரம்பிக்கும் பேரணி மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.
நேற்று(06) முல்லைத்தீவு பண்டாரவன்னியன் சிலையிலிருந்து ஆரம்பமாகிய பேரணி அலம்பில் சந்தியினை சென்றடைந்து குருந்தூர் மலை பெளத்த ஆக்கிரமப்பினை எதிர்த்தும் அலம்பில் துயிலுமில்லத்தில் நினைவேந்தலை மேற்கொண்டதுடன் செம்மலை நீராவியடிப் பிள்ளையாரை சென்றடைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு திட்டமிட்ட பௌத்தமயமாக்கல்,நில அபகரிப்பு,இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல்கொடுத்தது. தென்னைமரவாடியினூடாக திருகோணமலை நோக்கி பேரணி பயணித்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்,அரசியல் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.


